விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது கொங்கரப்பட்டு கிராமம். இங்கு உள்ள 14 வயது சிறுமி ஒருவர், அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி மேய்ச்சலுக்கு மாடு ஓட்டிச் சென்றசிறுமி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தந்தை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவரின் விவசாய கிணற்றில் அந்தச் சிறுமியின் உடல் மிதந்து கொண்டிருந்தது. உடலில்காயங்கள் இருந்தன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள், ‘அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கூறி வல்லம் கூட்டுச் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

அங்கு வந்த ஏடிஎஸ்பி தேவநாதன்,டிஎஸ்பி இளங்கோவன் தலைமையிலானபோலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சிறுமியின் உடலை போலீஸார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்குள்ள டாஸ்மாக் கடையால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதாக கிராம மக்கள் புகார் கூறினர்.

இதையடுத்து, விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அந்த டாஸ்மாக்கடை மூடப்பட்டது. மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அவனது நண்பர்கள் 3 பேரையும்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில்,அவர்கள் 4 பேரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்தது.