சென்னை மாநகரின் கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயர்த்த ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும், பெரிய நகரங்களில் நெருக்கடியைத் தவிர்க்க துணை நகரங்கள் உருவாக்கப்படும், ‘சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் கூறப்பட்டிருப்பதாவது:

பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும். சென்னைக்கான 3-வது பெரும் திட்டம், 2026-க்கு முன்பே முடிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்துக்கு உயர்த்த ‘சிங்காரச் சென்னை 2.0’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், போக்குவரத்து, குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய முன் மாதிரித் திட்டம் உருவாக்கப்படும்.

வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை உருவாக்கவும், வெள்ளப் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை அமைக்கவும் சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய ‘சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும்.

அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே 2-வது கட்டப் பணிகளை 50:50 என்ற செலவு பகிர்வு அடிப்படையில் மத்திய அரசு தனது பங்கு மூலதனத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் பெருந்திரள் விரைவுப் போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.