செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்கும் வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளைக் குப்புறப் படுக்கவைத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கிறது. அப்படி பாதிக்கும்போது ஆக்சிஜன் சுத்திகரிப்பு தடைப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரில் சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படாமலேயே, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அவ்வாறு ஆக்சிஜன் தடைப்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ பயன்படுத்தப்படுகிறது.
ஆள்காட்டி விரலை பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் வைத்தால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தெரியவரும். இந்த அளவானது சராசரியாக 96 முதல் 100 வரை இருக்க வேண்டும். 95-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்குக் கீழ் குறையும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டுவரும் கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 640 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் உள்ளன. அதில், அனைத்துப் படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளன. இருப்பினும், அங்கு செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்கும் வகையில் உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி விழித்துக்கொண்டிருக்கும்போது நோயாளிகளைக் குப்புறப் படுக்கவைத்து (awake prone positioning) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார், மயக்கவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
”நோயாளிகளை நேராகப் படுக்க வைக்காமல் குப்புறப் படுக்கவைத்தால் மூச்சுத் திணறல் குறைகிறது என்பதைக் கண்டறிந்தோம். அதை கரோனா நோயாளிகளுக்குச் செயல்படுத்திப் பார்த்தோம். குறிப்பிட்ட நேரம் வரை வலது புறம், இடது புறம் ஒருக்களித்துப் படுக்கும்போதும், முற்றிலும் திரும்பிப் படுக்கும்போதும் நுரையீரலில் ஆக்சிஜன் பரிமாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது.
இதனால், தொடர்ந்து செயற்கை ஆக்சிஜன் அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவ்வப்போது அளித்தால் போதுமானது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆக்சிஜன் அளித்துவிட்டு, ஒரு மணி நேரம் இடைவெளி அளிக்கிறோம். குப்புறப் படுக்கும்போது உடலில் ஆக்சிஜன் அளவு 85 சதவீதம் இருந்தாலும் பிரச்சினை ஏற்படுவதில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் தொடர்ந்து செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
குப்புறப் படுக்கவைத்து சிகிச்சை அளிப்பதால் ஆக்சிஜனுக்கான தேவை, செலவு ஆகியவற்றைக் குறைக்க முடிகிறது. வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு குப்புறப் படுக்க முடியாது. எனவே, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒருவேளை உணவை இரண்டு வேளைகளாகப் பிரித்து அளிக்கிறோம். நீராகாரங்கள் அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர்.
10 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் தேவை
மருத்துவமனை வளாகத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ வடிவ ஆக்சிஜன் டேங்க் உள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்குத் தேவையான 88 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை ஒரு நாளில் அளிக்க முடியும். ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்துக்கு 4 லிட்டர் ஆக்சிஜன் அளிக்க வேண்டும். தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது”.
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.