ஸ்விஸ் விதிமுறைப்படி நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகள், அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கான அணியிலும் மாற்று வீரர் ஒருவருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். அதாவது ஒரு அணியிலிருந்து 4 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.

அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும். போட்டிக்கான செஸ் போர்ட் வரிசையில் எந்த இருக்கையில், எந்த வீரர் விளையாடுவார் என்பதை அணி நிர்வாகம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அதாவது முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் போர்ட்களில் எந்த வீரர் விளையாடப்போகிறார் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

கடைசி நேரத்தில் இந்த வரிசையை மாற்ற முடியாது. முதல் போர்டில் விளையாடும் வீரருக்கு ஓய்வு கொடுத்தால், இரண்டாவது போர்டுக்கான வீரர் முதல் போர்டில் ஆடுவது போன்ற மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் விளையாட முடியாது.

ஒவ்வொரு போட்டிக்கும் தலா 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் போட்டியை சமனில் முடித்துக் கொள்ள முடியாது. வெற்றிக்கு ஒரு புள்ளி, சமனில் முடிந்தால் அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்குப் புள்ளி கிடையாது.

நான்கு வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் முடிவில் அதிக புள்ளி பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதுடன், அணிக்கு மொத்தத்தில் 2 புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அந்த வகையில் 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகளைக் குவித்துள்ள அணிக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால், அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும்.

இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும். இது தவிரச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூன்று தனிநபர்களுக்கும் பதக்கங்கள் உண்டு.

இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். தனிநபருக்கான பதக்கத்தைப் பெற ஒரு வீரர் குறைந்தது 8 போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.