கொடைக்கானல் நட்சத்திர ஏரி தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக ஜப்பானில் இருந்து 1,500 ‘பயோ பிளாக் கற்கள்’ வரவழைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை நகராட்சி சார்பில் ரூ.24 கோடியில் மேம்படுத்தி அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியில் கழிவு நீர் கலந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் மாசடைந்துள்ளது. இதை தடுக்க, ஏரியில் உள்ள தண்ணீரை ‘பயோ பிளாக்’ தொழில்நுட்பத்தில் சுத்தப்படுத்த நகராட்சியில் திட்டமிட்டனர்.

இதற்காக, ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக, ஜிம்கானா பகுதியில் தற்காலிக தொட்டி அமைத்து அதில் ஏரி தண்ணீரை சேமித்து ‘பயோ பிளாக்’ கற்களை மிதக்கவிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாசடைந்த ஏரி தண்ணீர் சுத்தமானது தெரிய வந்தது. இதையடுத்து, தற்போது 1,500 ‘பயோ பிளாக் கற்கள்’ ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கற்களை ஏரி தண்ணீரில் மிதக்க விடப்பட உள்ளது.

 

 

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஒன்றரை மாதமாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ‘பயா பிளாக்’ தொழில்நுட்பத்தில் ஏரி தண்ணீரை சுத்தப்படுத்தும் ஆய்வு நடந்தது. ஆய்வில் மாசடைந்த தண்ணீர் சுத்தமானது. ஏரி முழுவதும் 16,000 ‘பயோ பிளாக்’ கற்களை மிதக்க விட திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, 1,500 கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் 15 ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். தண்ணீரில் மிதந்தபடி இந்த கற்கள் ஏரி மாசுபடாமல் தடுக்கும” என்றனர்.