தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:

“தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருத்தணி (திருவள்ளூர்) தலா 9, டிஜிபி அலுவலகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), செய்யாறு (திருவண்ணாமலை), திருத்தணி பி.டி.ஓ (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), குட்வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 8, பெரம்பூர் (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சின்னக்கல்லாறு (கோவை), மரக்காணம் (விழுப்புரம்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) தலா 7, திண்டிவனம் (விழுப்புரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சென்னை நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 6.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 21-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

வங்கக் கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 21.07.2021 வரை: தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

20.07.2021 முதல் 21.07.2021 வரை: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.07.2021 முதல் 18.07.2021 வரை: கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

17.07.2021 முதல் 21.07.2021 வரை: கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

17.07.2021 முதல் 21.07.2021 வரை: தென்மேற்கு அரபிக் கடல், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

17.07.2021: வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here