புற்று நோய் சிகிச்சைக்கு ஜிப்மருக்கு வருவோரில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். 2ம் இடத்தில் கடலூரும், மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளது.

புற்றுநோய் பாதிப்புக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துள்ளன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக அரசுமருத்துவமனையை அணுகினால், ரேடியோதெரபி சிகிச்சை வேண்டுமென்றால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஜிப்மரில்உள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு புதுவை மட்டுமல்லாமல் தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் இருந்தும் அதிகளவில் வருகின்றனர். இதன் காரணமாக ஜிப்மரில் புற்றுநோய் பிரிவில் நோயாளிகளின் கூட்டம் அதிகளவில் உள்ளது. ஜிப்மர் புற்றுநோய் சிகிச்சை தரப்பில் விசாரித்தபோது, “ஜிப்மரில் கடந்தாண்டு நவம்பரில் 377 பேருக்கும், டிசம்பரில் 291 பேருக்கும், கடந்த ஜனவரியில் 368 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்களும், 2-ம் இடத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், 3-ம் இடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். 4-ம் இடத்தில் தஞ்சையைச் சேர்ந்தவர்களும், 5-ம் இடத்தில் நாகையைச் சேர்ந்தவர்களும், 6-ல் திருவண்ணாமலை மாவட்டத்தினரும், 7-ம் இடத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஜிப்மருக்கு வரும் புற்றுநோயாளிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருக்கின்றனர். புற்றுநோயால் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜனவரியில் ஜிப்மருக்கு வந்தவர்களில் 41-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 55% பேரும், 61-80 வயதுக்கு உட்பட்டவர்கள் 29% பேரும், 21-40 வயது உட்பட்டவர்கள் 13% பேரும், 20 வயதுக்கு உட்பட்டோர் 2% பேரும், 80 வயதுக்கு மேற்பட்டோர் 1% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 104 பேர் தலை மற்றும் கழுத்து புற்று நோயாலும், 42 பேர் மார்பக புற்றுநோயாலும், 41 பேர் கர்ப்பப்பை புற்று நோயாலும், 24 பேர் உணவுக்குழாய் புற்றுநோயாலும், 21 பேர் வயிறு புற்று நோயாலும், 20 பேர் நுரையீரல் புற்று நோயாலும், 18 பேர் மலக்குடல் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்” என்றனர்.

புதுச்சேரி நிலையென்ன?: புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் நவம்பரில் 41 பேரும், டிசம்பரில் 41 பேரும், ஜனவரியில் 45 பேரும் புற்றுநோய் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து புற்று நோய் பாதித்தோரின் குடும்பத்தினர் கூறுகையில், “புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

முக்கியமாக புதுவையைச் சேர்ந்தவர்கள் ரேடியோ தெரபி சிகிச்சைக்காக பல மாதங்கள் ஜிப்மரில் காத்திருக்கும் நிலையுள்ளது” என்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “கடந்த டிசம்பர் மாதம் புதுவை வந்த மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாரிடம் ரேடியோ தெரபி சிகிச்சை மையம் அமைக்க ரூ.200 கோடி வழங்க வேண்டுமென முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

அதற்கு அவர், சிகிச்சை மையத்துக்கான கருத்துருவைஅனுப்பினால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து, மத்திய அரசிடம் நிதி பெற்று சிகிச்சை மையத்தை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை அரசு தொடங்கியுள்ளது” என்றனர்.

பதுச்சேரிக்கு தேவை தடுப்பூசி திட்டம்: புதுவை மாநில பாஜக சிறப்பு அழைப்பாளர் ஏ.வி. வீரராகவன் கூறுகையில், “கர்ப்பப்பை புற்று நோயை தடுப்பதற்காக எச்பிவி தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பதற்கு இந்த ஊசி போடப்படும்.

மத்திய அரசு முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2 கோடியே 55 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் புதுவை மாநிலத்தில் ஒப்பீட்டளவில் புற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக ஜிப்மர் புற்றுநோய் மண்டல ஆராய்ச்சியகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிலும் பெண்கள் சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட 6 மாநிலங்களுடன் புதுவைமாநிலத்திலும் கர்ப்பப்பை தடுப்பூசி திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.