கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான மதிப்பெண்கள் பட்டியல் 19-ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியாக உள்ளன.

இந்த மதிப்பெண்கள், மாணவர் 10-ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதமும், 11ஆம் வகுப்பில் எழுத்துமுறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20 சதவீதமும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு மதிப்பெண்களில் 30 விழுக்காடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in ,www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம் என்றும் மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் கூறிய செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.