முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகள், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், அன்றுமாலையே முதல் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, கரோனாதடுப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த புதிய அமைச்சரவையின் 2-வது அமைச்சரவைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாலை 6.15 முதல் இரவு 7.10 மணிவரை இக்கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் ஏற்கெனவே தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கான ஒப்புதல் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர சமீபத்தில் மருத்துவத் துறை தொடர்பான பொருட்களின் உற்பத்திக்கு தமிழக அரசுஅளித்துள்ள சலுகைகள் அடிப்படையில் முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டன.
விரைவில் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி துறைகள் தோறும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல், புதிய திட்டங்களுக்கு நிதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.