கரோனா தடுப்பூசி போடுவது குறித்து அறிவிப்பு இல்லையெனக் கூறி, ஈரோடு வீரப்பன் சத்திரம் கரோனா தடுப்பூசி மையத்தின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு

கரோனா தடுப்பூசி போடுவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி ஈரோட்டில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாநகராட்சியில் உள்ள 10 சுகாதார மையங்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதேபோல் புறநகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த முறையால் அனைத்து பகுதி மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் தற்போது சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் 20 வார்டுகள் என்ற அடிப்படையில் பிரித்து தடுப்பூசி போடப்படுகிறது.

நேற்று முதல் இந்த முறை அமலுக்கு வந்தது. இந்நிலையில், சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால், வழக்கம் போல ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட நேற்று காலை மக்கள் வரிசையில் காத்திருந்தனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில் அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

அவர்களிடம் இங்கு தடுப்பூசிகள் போடப்படாது என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், சத்தியமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு வடக்கு போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘ வழக்கம் போல தடுப்பூசி போடுவார்கள் என்று நம்பித்தான் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம். ஆனால் தற்போது தடுப்பூசி போடப்படாது என்று கூறுகின்றனர். இதை முன்கூட்டியே தெரிவித்து இருக்கலாம். அல்லது அறிவிப்பு பலகை வைத்திருக்கலாம். முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர்’ என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.