காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பை ஆண்டுதோறும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, உரிய காலமான ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, மேட்டூர் அணை வளாகத்தில் இன்று (ஜூன் 12) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“காவிரி டெல்டா பாசனத்துக்காக, உரிய காலமான ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டுள்ளது. 18-வது முறையாக, உரிய காலத்தில் நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சுமார் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறப்பதில் அரசு உறுதியாக இருக்கும். இதன் மூலம், பாசனத்துக்கு உரிய காலத்தில் நீர் கிடைப்பதுடன், பாசன பரப்பு அதிகரித்து, விளைச்சலும் அதிகரிக்கும். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவர்.

கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமையும்போது, 7 முக்கிய இலக்குகளை இலக்காகக் கொண்டு, திமுக அரசு செயல்படும் என்று உறுதிமொழி அளித்தோம். குறிப்பாக, நீர் மேலாண்மை, விவசாய மகசூல் பெருக்கம், மக்களுக்கு குறையான குடிநீர், உயர் தரமான கல்வி, உயர் தரமான மருத்துவம் உள்பட 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் அடைவோம் என்று அறிவித்து, இப்போது அதன்படி செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தில் 60 சதவீதமாக உள்ள விவசாயப் பரப்பை, 75 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், 10 ஆண்டுகளில் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டாவில், குறுவை சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோம். கடைமடை வரை நீர் சென்று சேரவும், அதனைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி நேற்று (ஜூன் 11) டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்வற்கு உத்தரவிடப்பட்டது.

தூர்வாரும் பணிகளில் கரூரில் 10, அரியலூரில் 33, தஞ்சாவூரில் 185, திருவாரூரில் 174, நாகையில் 89, மயிலாடுதுறையில் 26, கடலூரில் 58, புதுக்கோட்டையில் 9 உள்பட 9 மாவட்டங்களில், மொத்தம் 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.65.10 கோடி மதிப்பில், 461 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரப்படும். இந்தப் பணிகள் விவசாயிகளை கலந்தாலோசித்தும், சிறப்பு அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கான இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. குறுவை சாகுபடி பணிக்கான அனைத்து உதவிகளும் வேளாண்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்டவற்றின் மூலம் வழங்கப்படும். இலக்கைக் கடந்து, சாகுபடி இருக்கும். உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோ.வி.செழியன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி-க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்எல்ஏ-க்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜேந்திரன், சதாசிவம், கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடிமராமத்துத் திட்டத்தில் எவ்வளவு தூர்வாரப்பட்டது, எங்கெல்லாம் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பலமுறை கேள்வி எழுப்பினார்.

வெள்ளை அறிக்கை வெளியிட பலமுறைக் கேட்டும் பதில் இல்லை. இப்போதுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து வெளியிடுவோம்” என தெரிவித்தார்.