விவேக் மாரடைப்புக்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலையில் விவேக் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிக்கையுமே வெளியாகாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது:
“நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். பின் அவருக்கு ஆஞ்சியோகிராம் தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் மோசமான நிலையில் உள்ளார். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதற்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்”.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.