ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லாவிட்டாலும், தடுப்பூசி, மருந்துகள் வழங்கவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கவும் மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணியாக ஆதாரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது எனவும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. கரோனா 2-வது அலை நாடுமுழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கவும், ரெம்டெசிவிர் மருந்து வாங்கவும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் யுஐடிஏஐ உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது
இது குறித்து யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஒருவரிடம் ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கு அரசின் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது. ஆதார் சட்டத்தின்படி அந்த நபருக்கு அடிப்படை சேவைகள் வழங்குவதை மறுக்கக்கூடாது.
குறிப்பாக ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதற்காக ஒரு நபருக்கு தடுப்பூசி, மருந்து வழங்குதல், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தல் போன்றவற்றை வழங்குவதை மறுக்கக்கூடாது.
ஒருவரிடம் ஆதார் இல்லாவிட்டாலும், ஆதார் ஆன்-லைனில் ஆய்வுக்கு உட்படுத்துப்பட்டு சில காரணங்களால் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நபருக்குத் தேவையான சேவையை குறிப்பிட்ட துறை ஆதார் சட்டத்தின்படி வழங்கிட வேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதற்காக சேவைகளை வழங்கிட மறுக்கக் கூடாது.
ஆதார் அட்டை இல்லை என்பதற்காக ஒருவருக்கு அத்தியாவசியசேவை, மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவை மறுக்கப்பட்டால், அது குறித்து ஆதார் அமைப்புக்கும், குறிப்பிட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.
ஆதார் என்பது வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை பொதுச் சேவையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதாகும். ஆதார்சட்டம் பிரிவு 7-ன்படி, ஆதார் அட்டை ஏதாவது ஒரு காரணத்தால் கிடைக்கிவில்லை என்பதற்காக சேவைகளை மறுக்கக் கூடாது, விலக்கவும் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.