இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜூன் 24), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிகிறது. தமிழக அரசின் கொள்கைரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், கரோனா மூன்றாவது அலை குறித்தும், புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் குறித்தும், அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த ரூ.20,000 கோடி செலவிடப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில், நிதி சார்ந்த முக்கியமான முடிவுகள், கடந்த ஆட்சியில் இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்புகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.