கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று 17-ம் ஆண்டு நினைவு தினம், குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

kumbakonam-school-fire-17th-anniversary-commemorative-today-adjustable

குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்துப் படையலிட்டனர். பின்னர் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பாக நினைவு தின நிகழ்ச்சிகள் நடந்தன.

அங்கு 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், காயமடைந்த மாணவர்கள், அனைத்துப் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் அரசால் அமைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

#MetroPeople #NewsUpdates #Kumbakonam #school #fire #accident