“சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், இனி ஆபரேஷன் கள்ளச்சாராயம் 2.0 நடத்தப்படுமா?“ என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் இந்த திமுக அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப் பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக, சட்டமன்றத்தில் உள்துறை மானியக் கோரிக்கையின்போது கஞ்சா, கள்ளச் சாராயம், திரவ வடிவ கஞ்சா, போதை ஊசிகள், மருந்துப் பொருட்கள் வடிவில் தமிழகமெங்கும் போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடுவதை விரிவாக எடுத்துக் கூறினேன்.
ஆனால், குறுக்கிட்டுப் பேசிய முதல்வர், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை எப்படித் தடுக்கப்போகிறோம் என்று விரிவாக பதில் அளிக்காமல், முந்தைய ஆட்சியில் போதைப் பொருட்கள் பிடிபட்டதையும், இந்த ஆட்சியில் பிடிபட்ட எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பேசினார்.
அப்போது, அதற்கு பதில் அளித்துப் பேசிய நான், எங்கள் ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதால், போதைப் பொருட்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதாவும், முக்கியமாக மாநில எல்லைகளில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதன் மூலம் போதைப் பொருட்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதாகவும், ஆனால், இப்போது மாநில எல்லைகள் மூலம் வெளி நாட்டிற்கு கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது என்று நாளிதழ்கள் / ஊடகங்களில் வரும் செய்தியை மேற்கோள் காட்டிப் பேசினேன்.
கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக, அம்மாவின் அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச் சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது.
போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சந்துக் கடைகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக காவல் துறையின் கைகள், ஆளும் திமுகவினரால் கட்டப்பட்டுள்ளதால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அதிகமாக பயணிக்கும் மெரினா கடற்கரை சாலையில், காவல் துறைத் தலைவரான டிஜிபி அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை ஊடகங்களில் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இதுதொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்சினையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை கள்ளச் சாராய விற்பனை ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், இனி ஆபரேஷன் கள்ளச்சாராயம் 2.0 நடத்தப்படுமா? தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மலிவு விலை கள்ளச் சாராயத்தை நாடுகிறார்கள்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இந்த திமுக ஆட்சியில் கள்ளச் சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று இந்த திமுக அரசை எச்சரிக்கிறேன். மக்களின் உயிரையும், உடமையையும் காக்க அதிமுக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.
எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசின், ஆட்சியில் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் இந்த திமுக அரசும் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்“ என்று அவர் கூறியுள்ளார்.