கொரோனாவிலிருந்து உலகைக் காக்க, தடுப்பூசி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கொரோனாவுக்கான மருந்தை, மாத்திரை வடிவில் கண்டுபிடிக்கும் பணிகளையும் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸை தொடக்க நிலையிலேயே வளரவிடாமல் தடுக்கும் மருந்தை, மாத்திரை வடிவில் விரைவில் கண்டுபிடிக்கப்போவதாக பைசர் மருந்து நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பைசர் ஏற்கெனவே தடுப்பூசியொன்றை கண்டுபிடித்து, பல நாடுகளுக்கு அதை விநியோகம் செய்துவருகிறது. இந்தியாவில் இந்த தடுப்பூசி இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும்கூட, இந்தியாவில் தற்போது பரவும் புதிய அமைப்பை கொண்ட கொரோனா வகையை இந்த பைசர் தடுப்பூசி தடுக்கிறது என நிரூபணமாகியுள்ளது. இப்போது அடுத்தகட்டமாக, கொரோனாவுக்கான மாத்திரை கண்டுபிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆல்பர்ட் பௌர்லா அளித்த பேட்டியில், “வைரஸை வளரவிடாமல் தடுக்கும் வகையிலான இந்த மாத்திரையை, சாதாரண சளி காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்வது போல, வீட்டிலிருந்தபடியே எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த மாத்திரையை விற்பனை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்” என கூறியுள்ளார். விரைவில் இந்த மாத்திரையை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் அங்கீகரிப்பார்கள் என நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார் அவர்.
உலகையே இப்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சூழலுக்கு ஏற்றார்போல தன்னுடைய அமைப்பில் பலவித மாற்றங்களை ஏற்படுத்திவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த ஒவ்வொரு மாற்றத்துக்கும், ஒவ்வொரு வகை தடுப்பு மருந்தும், ஒவ்வொரு வகை சிகிச்சையும் மருந்து – மாத்திரையும் தேவைப்படுகிறது. அப்படியிருக்கும்போது, இந்த மாத்திரை உலகிலுள்ள அனைவருக்கும், வெவ்வேறு வகை கொரோனா வடிவம் இருக்கும் நபர்களுக்கும் உகந்ததாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பேசிய ஆல்பர்ட், ”நிச்சயம் இது கொரோனா வைரஸின் பல மாற்றங்களுக்கு தீர்வாக இருக்கும்” என உறுதியளித்துள்ளார். ஒரு சில கொரோனா அமைப்பு மாற்றங்களுக்கு இது முழுமையான தீர்வாக இருக்காது என்றாலும், பெரும்பாலான மாற்றங்களுக்கு தீர்வாக இருக்குமென கூறியுள்ளார் அவர்.
இந்த மாத்திரை உட்கொள்வது மூலம், முதல் நிலையிலேயே கொரோனாவின் தீவிரத்தன்மை குறைந்துவிடும் என்றும், அதன் விளைவாக, நம்மால் தீவிரமான கொரோனா பாதிப்பை தவிர்க்க முடியும் என்றும் ஆல்பர்ட் கூறியுள்ளார்.
இந்த மாத்திரை, ப்ரோடீஸ் இன்ஹிபிட்டார்ஸ் எனப்படும் உடலுக்குள் செல்லும் வைரஸ் பன்மடங்காவதை தடுக்கும் தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது. பொதுவாக ஹெச்.ஐ.வி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு, உடலுக்குள் இருக்கும் வைரஸ் பன்மடங்காமல் இருக்க, இந்த வகை மாத்திரைதான் தருவார்கள். கொரோனா வைரஸ், பன்மடங்காவதை இந்த மாத்திரை தடுக்கும்.
பன்மடங்காவது தடுக்கப்படுவதால் என்ன பயன்?
கொரோனா பன்மடங்காகும்போதுதான், அது புதுப் புது அமைப்பை பெறும். அந்த புதிய அமைப்பை கொண்ட கொரோனா, உடலுக்குள் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்போதுதான் சிக்கல் உருவாகி, தீவிர பாதிப்புகள் ஏற்படும் நிலையெல்லாம் வரும். ஆகவே பன்மடங்காக அது மாறாமல் தடுக்கப்படும்போது, மற்ற அனைத்து பிரச்னைகளும் தொடர்ச்சியாக தடுக்கப்பட்டுவிடும்.
இந்த மாத்திரைக்கான, மனிதர்கள் மீது பரிசோதனைகள் விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில், பக்கவிளைவுகளற்ற மாத்திரையாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது. மனிதர்கள் மீதான பரிசோதனையில், குழந்தைகளையும் உட்படுத்தவிருப்பதாக ஆல்பர்ட் கூறியுள்ளார். குழந்தைகளில், ஆறு மாதம் தொடங்கி 11 வயது வரையுள்ள பலரும் இருப்பரென சொல்லப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள், மருந்துகளில் எதுவும் குழந்தைகளுக்கு உகந்ததென சொல்லப்படாத நிலையில், இந்த மாத்திரை அந்த நிலையை மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.