இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் துறையில் கல் வெட்டியலாளர்கள் பற்றாக்குறை தொடர்கிறது.இதனால் தமிழ் கல்வெட்டுகளை பதிப்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தின் முக்கிய நிகழ்வுகளை கல்வெட்டுகளாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) சார்பில் கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகித நகல்களாக 1886-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை வரலாறு மற்றும் தமிழாய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஏஎஸ்ஐ-யின் கல்வெட்டுப் பிரிவு வெளியிடுகிறது. இந்த கல்வெட்டுப் பிரிவின் தலைமையகம் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது.
கடந்த 100 வருடங்களாக கிடைத்த கல்வெட்டுகளின் காகித நகல்கள் மைசூரு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில் பதிப் பிக்கப்படாதவையும் அடங்கும். இந்த காகித நகல்களுக்கு சுமார் 75 ஆண்டுகள் வரை ஆயுள் இருக்கும்.
அதற்குள் அந்த நகல்கள் கல்வெட்டியலாளர்களால் படிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட வேண்டும்.இந்நிலையில் சமீப ஆண்டுகளாக ஓய்வுபெறும் கல் வெட்டியலாளர்களின் பணியிடம் மீண்டும் நிரப்பப்படாமல் உள்ள தாகப் புகார் எழுந்துள்ளது.
மைசூரு அலுவலகம்
மைசூரு அலுவலகத்தில் கடந்த மாதம் 758 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் தமிழ் உள்ளிட்ட எந்த மொழிக்கும் கல்வெட்டியலாளர் பதவிக்கான அறிவிப்பு அதில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏஎஸ்ஐ-யின் டெல்லி தலைமையக அதிகாரிகள் கூறும்போது, “மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் வேறு வழியின்றி 50 ஓய்வு பெற்றவர்களை வைத்து கல்வெட்டுகளை பதிப்பிக்கும் பணி தொடர்கிறது. பணியிடங்களை நிரப்பினால் கல்வெட்டுகளை பதிப்பிக்கும் பணி வேகமடையும். உதாரணமாக, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் படி எடுக்கப்பட்ட அதிகமான தமிழ் கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. இவற்றில், தென்னிந்தியா மட்டுமல்ல இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு பல முக்கிய ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள கல்வெட்டு களில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. மற்றவை சம்ஸ்கிருதம், பெர்ஷியன் எனப்படும் பாரசீக மொழி, அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராட்டியம், ஒடியா, மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை ஆகும். இவற்றில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் தவிர மற்றவற்றின் பதிப்பிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்கானவை அதிகம் என்பதால் அதற்கு பிற மொழி கல்வெட்டுகளை விட பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கல்வெட்டுகள் கிடைத்துவருவதால், தமிழ் கல்வெட்டுகள் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது.
இதனிடையே ஏஎஸ்ஐயின் கல்வெட்டுகள் பிரிவு அலுவலகத் தில் இருந்து வெளியானவை அனைத்தும் தென்னிந்திய மொழி கல்வெட்டுகள் மட்டுமே. வட இந்தியமொழிக் கல்வெட்டுகள் எனும்தலைப்பில் ஒன்று கூட வெளியாகவில்லை. இதில் அதிகம் இடம்பெற்ற சம்ஸ்கிருதத்துடன் வட இந்தியக் கல்வெட்டுகள் எனும் தலைப்பில் முதல்முறையாக ஒரு தொகுதி தயாராகி வருகிறது. இந்த சூழலில் சம்ஸ்கிருத மொழி கல்வெட்டியலாளருக்கு என இருந்த இரண்டு பணியிடங்களும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.