உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 2 தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி நடைமுறை அமலுக்கு வந்து 4 ஆண்டுகளாகின்றன. எனினும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைகள் குறித்து முறையிட ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப் பாயம் அமைக்கப்படவில்லை.

இதனால் ஜிஎஸ்டி வரி கட்டுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்த தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட கோரி மூத்த வழக்கறிஞர்கள் அமித் சானி, பிரீத்தி சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜிஎஸ்டி தீர்ப் பாயங்களில் காலி இடங்களை நிரப்பாமல் மத்திய அரசு தாமதம்செய்கிறது என்றும், உடனடியாக அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும், நீதிபதிகளின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் தீர்ப்பாயங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) 18 பேரையும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு (ஐடிஏடி) 13 பேரையும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

என்சிஎல்டி தீர்ப்பாய உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டு அல்லது அவர்களது 65 வயது வரை பதவியில் நீடிப்பார்கள். அதேபோல் ஐடிஏடி தீர்ப்பாயத் துக்கு உறுப்பினர்கள் 4 ஆண்டு கள் அல்லது அவர்களது 67வயது வரை பதவியில் நீடிப்பார்கள் என்றும் மத்திய அரசுதெரிவித்துள்ளது. -பிடிஐ