புதிய கட்சி பெயரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சியை பதிவு செய்ய கட்சியின் பெயர், மாநிலம், கட்சியின் நோக்கம், உறுப்பினர்கள், பிரிவுகள், நிர்வாகிகள் தேர்வு நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ரூ.10,000-க்கான வரைவோலையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்சி தொடர்பான அறிவிப்பை 2 தேசிய நாளிதழ்கள், 2 உள்ளூர் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். புதிய கட்சி தொடர்பான ஆட்சேபங்களை 30 நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். இதன்பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் மார்ச் 19-ம் தேதி வரையும் மேற்குவங்கத்தில் ஏப்ரல் 7-ம் தேதி வரையும் 7 நாட்கள் தளர்வு திட்டம் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.