மாணவர் சவப்னோதீப் கடந்த புதனன்று காலை தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்றும், சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்து துன்புறுத்துவதால், தன்னை வந்து அழைத்து செல்லுமாறும் கேட்டுள்ளார்.
தற்கொலை செய்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்
தற்கொலை செய்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்PT

மேற்கு வங்காளத்தில், நாடியாவின் ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்தவர் சவப்னோதீப் என்ற மாணவர். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களில் சிலர் சவப்னோதீபை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனதளவில் பாதிப்படைந்த மாணவர் சவப்னோதீப், இது குறித்து உடன் படித்த மாணவர்களிடம் சொல்லியதுடன், ” சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை எப்போது நிறுத்துவார்கள்?” என்றும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர் சவப்னோதீப் கடந்த புதனன்று காலை தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்றும், சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்து துன்புறுத்துவதால், தன்னை வந்து அழைத்து செல்லுமாறும் கேட்டுள்ளார்.

ஆனால் அன்று இரவே 11.15 மணியளவில் தான் தங்கியிருந்த மாணவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அதீத காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இறந்திருக்கிறார்.

முதல்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் மாணவனின் தலை, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. தவிர, உடலில் ஏற்பட்டுள்ள பிற காயங்களால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர்களை போலீசார் விசாரணை செய்ததில், “சில நாட்களாக ராகிங் தொந்தரவால் சவப்னோதீப் இரவு சரியாக தூங்கமுடியவில்லை என்று எங்களிடம் தெரிவித்திருந்தார். சவப்னோதீபின் இத்தகைய மன உளைச்சலை கல்லூரி முதல்வர் ரஜத் ரேய்க்கு நாங்கள் தெரிவித்தோம். அவர் மறுநாள் நடவடிக்கை எடுப்பார் என நினைத்திருந்தோம். ஆனால் அன்று இரவே சீனியர் மாணவர்கள் சிலர் சவப்னோதீபை மொட்டைமாடியில் ஆடைகள் இன்றி ஓடவிட்டு ராகிங் செய்தனர்.

இது குறித்து உடனடியாக முதல்வரிடம் சொல்வதற்காக நாங்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் எங்களின் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை, அதற்குள் மாணவர் தற்கொலைக்கு முயற்சித்து விட்டார்” என்று மாணவர்கள் சிலர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சவப்னோதீப் தற்கொலை விவகாரத்தில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் சௌரப் சௌத்ரி சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர், இருப்பினும் சவப்னோதீப் தங்கியிருந்த அதே விடுதியில் அதிகாரபூர்வமற்ற நபராக தங்கியிருந்து விடுதியின் மெஸ் குழுவின் பொறுப்பை கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சவப்னோதீபின் தந்தை போலீசாரிடம் கூறுகையில்,” எனது மகனுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாத நிலையில், சௌரப் சௌத்ரி என்னிடம், ‘சவப்னோதீபிற்கு விடுதியில் இடம் பெற்றுத்தர என்னால் இயலும், நான் மெஸ் கமிட்டியின் தலைவர். சவப்னோதீபிற்கு இடம் வேண்டுமென்றால் அதற்கு 1000 ரூபாய் செலவாகும்’ என்று என்னிடம் கூறியதால், நான் சௌரப்க்கு 1000 ரூபாய் கொடுத்தேன். அவரும் அவரது அதிகாரத்தால் சவப்னோதீபை விடுதியில் தங்கவைத்தார்” என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழக முதல்வர் ரஜத் ரே இதுகுறித்து பத்திரி்கையாளருடன் பேசியபோது, “சௌரப் சௌத்ரி மெஸ் கமிட்டியின் தலைவர் இல்லை, அவர் சவப்னோதீபின் தந்தையிடம் பணம் பெற்றிருந்தால் அது சட்டவிரோதமானது. சவப்னோதீபின் நண்பர்கள் என்னிடம் புகார் கூறியதும் நான் உடனடியாக ராகிங் செய்யும் மாணவர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்தேன், அதற்குள் இந்த விபத்து நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.