மதுரை: “1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினர். அத்தனையும் கருணாநிதியின் முன்னிலையிலேயே நடந்தது. அன்றைய நாள் ஒரு சட்டமன்ற வரலாற்றில் ஒரு கறுப்பு நாள ” என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “1989-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை. அவர் திமுக உறுப்பினர்களால் கீழே தள்ளிவிடப்பட்டார். உடனே இப்போது அமைச்சராக இருக்கும் நபர் ஒருவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசரும், அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் தடுத்து நிறுத்தினர்.

அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினர். அத்தனையும் கருணாநிதியின் முன்னிலையிலேயே நடந்தது. அப்படியொரு நிகழ்வு சட்டமன்ற வரலாற்றில் நடந்தது இல்லை. சொல்லப்போனால் அது ஒரு கறுப்பு நாள். அன்று நடந்த உண்மையை திருநாவுக்கரசரிடமும், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடமும் கேட்டால் தெரியும். ஜெயலலிதாவுக்கு நடந்த அவமானத்தை முதல்வர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். ஜெயலலிதாவின் சேலையையும், தலைமுடியையும் பிடித்து இழுத்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது” என்றார்.

முன்னதாக நேற்று ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்தப் பேட்டியில், “நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இன்று மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ் பேசியுள்ளார்.

இபிஎஸ் திடீர் ஆய்வு: மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே உள்ள மைதானத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில். அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, செல்லூர் ராஜு, காமராஜ், நத்தம் விஸ்வநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பி.வி.பரமசிவன் ஆகியோர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் மாநாடு நடக்கும் மைதானத்தை பார்வையிட்டனர்.

மாநாடு நடைபெறும் அன்று காலை 7 மணி அளவில் அதிமுக பொன்விழா ஆண்டை குறிக்கும் வகையில் 51 அடியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்க உள்ளார். 50 ஆண்டுகால அதிமுக வரலாற்று சாதனை அடங்கிய புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்து பின் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளார். மாலை 7 மணி அளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக சேலத்தில் இருந்து மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி உணவு அருந்தும் இடம், மருத்துவ முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி துவக்க உள்ள இடம் மேடை மற்றும் சமையல் கூடாரங்கள், வாகன நிறுத்துமிடம் தற்காலிக கழிப்பறைகள் அமையும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.