தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி இன்று தொடங்கியது. இதையடுத்து 6.34 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை கண்காணிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12-ம் தேதி இரவு தொடங்கியது.
முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் தீரவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மறுநாள் (மே 13) இரவே ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஆக்சிஜனை குளிர்விக்கும் கொள்கலன் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஸ்டெர்லைட் அலுவலர்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இஸ்ரோ வல்லுநர் குழுவினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
சுமார் ஒரு வார தீவிர முயற்சிக்குப் பின் தொழில்நுட்பக் கோளாறு முற்றிலும் சரி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆலையின் ஒவ்வொரு பகுதியாக இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளும் முறையாக இயங்கியதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இன்று மாலை வரை சுமார் 12 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.
இதில் 6.34 டன் ஆக்சிஜன் இன்று மாலையில் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தேவைக்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியிருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் எங்கள் நிறுவன வளாகத்தில் உள்ள சேமிப்புக் கலன்களில் சேமித்து வைக்கப்பட்டு, அரசின் அறிவுரைப்படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி:
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் 500 டன் மற்றும் 550 டன் திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு உற்பத்தி நிலையத்தில் தற்போது திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக 35 டன் அளவுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
2-வது உற்பத்தி நிலையத்திலும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்த உற்பத்தி நிலையத்திலும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அதில் அடுத்த சில நாட்களில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது உற்பத்தி நிலையத்திலும் 35 டன் அளவுக்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
இரண்டு அலகுகளிலும் இந்த அளவுக்கு மேல், வாயு நிலையிலான மருத்துவ ஆக்சிஜனை தான் உற்பத்தி செய்ய முடியும். இந்த வாயு நிலையிலான ஆக்சிஜனை ‘பி’ மற்றும் ‘டி’ வகை சிலிண்டர்களில் அடைத்து மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிலிண்டர்களில் மருத்துவப் பயன்பாட்டுக்கான வாயு நிலையிலான ஆக்சிஜனை அடைத்து விநியோகம் செய்ய உற்பத்தி நிலையத்தில் சில உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.
அந்த வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, வாயு நிலையிலான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு தொடங்கும்போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.