திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோல் மாநகரம் முழுவதும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறுகலான சாலைகள், அவற்றில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. அவ்வப்போது கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதும் தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் பாரபட்சமின்றியும், எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமலும் அதிகாரிகள் செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் மற்றும் சுற்றுச்சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பது குறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள், விளம்பர பதாகைகள், பலகைகள், கழிவு நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன. மேலும் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தள்ளுவண்டிகள், இருக்கைகளும் அகற்றப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். இதுபோல் திருநெல்வேலி மாநகரம் முழுக்க முக்கிய சாலையோரங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.