நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள பழங்குடி மாணவிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கல்வி கட்டணத்துக்கான ரூ. 1.30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சார்ந்தவர் பூஜா என்ற பழங்குடி மாணவி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால் கல்விக் கட்டணம் கட்ட தனது குடும்பத்தால் முடியாத நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் கட்டப்பட்டு தற்போது மருத்துவம் பயின்று வருகிறார்.

இதற்கிடையே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சி.முருகேசன், மாவட்ட செயலாளர் எம்.அழகேசன் ஆகியோர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மாணவி பூஜாவின் வீட்டுக்குச் சென்று, தொடர்ந்து கல்வி பயில, சங்கம் உதவிகள் செய்யும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில் பூஜாவின் கல்விகட்டணத்துக்கான நிதி வழங்கும் விழா செங்கல்பட்டு சங்க அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஸ்தாபகருமான பி.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவி பூஜாவின் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணத்துக்கான நிதி ரூ 1.30 லட்சத்தை வழங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு கட்டணமும் செலுத்த உதவி செய்வதாக அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.

சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அழகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன் வாழ்த்திப் பேசினர்.