புதிய மின் இணைப்பால் இனி 3 போகம் பயிரிடப் போவதாக செங்கை விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2021-ம்ஆண்டில் விவசாயிகளுக்கு ஒருலட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப். 23-ல் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இந்த திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தில் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் 985 பேருக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இதுவரை டீசல் மோட்டர் மூலம் நிலங்களுக்கு தண்ணீர் இறைத்து ஒரு போகம் மட்டுமே பயிரிட்டுவந்த எங்களுக்கு மின் இணைப்பு கொடுத்ததால் இனி 3 போகம் பயிரிடுவோம். 10 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி மனு கொடுத்தும் பயன் இல்லாமல் இருந்த எங்களுக்கு தற்போது, 10 மாதங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து மின்சார இணைப்பு வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றனர்.