குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால், தந்தையிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல் நாடகமாடிய மகனை போலீஸார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54). இவர் வடபழனி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த 13-ம் தேதி காலை தனது மகன் கிருஷ்ணபிரசாத் (24) வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பென்சிலய்யா தனது மனைவி ஜெயலஷ்மி, மூத்த மகன் ஆகாஷ் மற்றும் கிருஷ்ணபிரசாத் ஆகியோருடன் வசித்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், பென்சிலய்யாவின் செல்போன் வாட்சப் எண்ணுக்கு அவரது மகன் கிருஷ்ணபிரசாத் செல்போன் வாட்சப் எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது.

எதிர்முனையில் பேசிய நபர் ‘உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தின் செல்போன் எண்ணின் அழைப்புகளின் விவரங்கள் மற்றும் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கிருஷ்ணபிரசாத், தெலங்கானா மாநிலம், செகந்திரபாத்தில் இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில், தனிப்படை போலீஸார் செகந்திரபாத் சென்று, அங்கு தெலங்கானா காவல் அதிகாரிகள் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தை மீட்டனர்.

விசாரணையில், கிருஷ்ணபிரசாத்துக்கு சரியான வேலை இல்லாததாலும், குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதாலும், தந்தையிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிருஷ்ணபிரசாத் கடத்தல் நாடகம் அரங்கேற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கண்டித்து கடுமையாக எச்சரித்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.