தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் வரை நேரடி வழியாக (automatic route) அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் தற்போது நேரடியாக 49 சதவிகிதம் வரை நேரடி அந்நிய முதலீடு பெற முடியும். 49 சதவிகிதத்திற்கு மேல் எந்த முதலீடும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செய்யப்பட வேண்டும். இந்தநிலையில் தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் வரை நேரடி வழியாக (automatic route) அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பாக 49% மேலான முதலீடுகளுக்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், தற்போது 100 % வரை நேரடி வழி ஒப்புதல் அளிக்கப்படும்.
புதிய முறைப்படி ரிசர்வ் வங்கியிடம் துறை ரீதியான அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 100 சதவீத தொலைத்தொடர்பு துறையில் நேரடி வழி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது.
தொலைத்தொடர்புத் துறைக்கான விரிவான இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.