சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள 372 இடங்களில் ரூ.429.73 கோடி செலவில் நவீன கட்டணக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில், மாதந்திர கவுன்சில் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (அக்.28) நடந்தது. முன்னதாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் ஒருவரை, சென்னைப் பல்கலை. ஆட்சி பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலரான ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது. இதில், 68-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அமுதா வேட்பு மனு தாக்கல் செய்து, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அதைதொடர்ந்து மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தத் கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் விவரம்:

  • மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக 37 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், ஐந்து நகர்ப்புற சமுதாய நல்வாய்வு மையங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
  • கரூர் வைஸ்யா வங்கியின் வாயிலாக அம்மா உணவக தினசரி விற்பனை தொகை வசூலிப்பதற்கான ஒப்பந்தம் 2023 செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பிராட்வே பேருந்து நிலையத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் மல்டி மாடல் வசதி வளாகத்தை மேம்படுத்துவதற்கான நிர்வாக அனுமதி அரசிடம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யும் வகையில் மூன்று மண்டலங்களில், 372 இடங்களில் 429.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் நவீன கட்டணக் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.
  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கல்லுாரி கட்டடங்களுக்கு, முந்தைய குடியிருப்பு அடிப்படை தெரு கட்டணத்தில் 1.6 மடங்கு என சொத்து வரி விதிப்பை நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டு முதல் மேற்கொள்ளப்பட சீராய்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.