80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சம்பா மாவட்டம் பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த லாலா ராம் சாஹு என்பவரின் 11 வயது மகன் ராகுல் சாஹு. இந்த சிறுவன் கடந்த 10ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் உள்ளூர் காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். சிறுவன் ராகுலை மீட்பு பணியினரால் சாமானியமாக மீட்க முடியவில்லை. அவர் 60 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை முதலில் கண்டறிந்தனர். பின்னர் சிறுவனுக்கு குழாய் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து மீட்பு பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு ஒரு வழியாக 104 மணி நேர போராட்டத்திற்கு பின் ராகுல் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டார். நாட்டிலேயே மிக நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட ஆழ்துளை கிணறு மீட்பு பணியாக இது கருதப்படுகிறது.
சுமார் 5 நாள்கள் கிணற்றிலேயே சிக்கியதால் உடல் நலிவுற்ற அச்சிறுவன் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியினரின் நடவடிக்கைக்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக முதலமைச்சர் பகேல் கூறியுள்ளார்.