திருமயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் கலந்து கொண்டன.

முன்னதாக திருமயம் தாமரைகண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாடாக களத்தில் இறக்கப்பட்டது. ஒவ்வொரு மாட்டையும் அடக்க 9 பேர் கொண்ட குழு களம் கண்டனர். இதில் ஒரு மாட்டை அடக்க 25 நிமிடம் மாடுபிடி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாட்டை அடக்கி விட்டால் மாடு பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாட்டை குழுவால் அடக்கமுடியாத பட்சத்தில் மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த மாடு, மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில்ம காளையை அடக்க முயன்று மாடு முட்டியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தின் மூலமும், திருமயம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமயம் ஒன்றிய திமுக செய்திருந்தது. திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.