புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 51% பால் உற்பத்தி அதிகரித்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தித் துறைகளின் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலக பால் உற்பத்தியில் இந்தியா முதல் நாடாக உள்ளது. உலக பால் உற்பத்தியில் 24 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவி ஏற்ற கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் பால் உற்பத்தி 51 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 நிதி ஆண்டில் 146.31 மில்லியன் டன்னாக இருந்த இந்திய பால் உற்பத்தி 2021-22ல் 221.1 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. 2021-22ல் மட்டும் 22 கோடி டன் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 6.38 சதவீதம் வளர்ச்சி இருந்துள்ளது.

பால் உற்பத்தி அதிகரித்திருப்பதைப் போலவே அதன் வணிகமும் அதிகரித்துள்ளது. கடந்த 2021-22ல் விற்கப்பட்ட பாலின் மதிப்பு ரூ. 9.32 லட்சம் கோடி. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்ட அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரண்டின் மதிப்பைவிட அதிகம்.

பால் உற்பத்தியை அதிகரிக்கவும், அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், பால் உற்பத்தி பெருக்கத்திற்கான தேசிய திட்டம், பால் மற்றும் பால் பொருட்களின் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு வளர்ச்சி நிதியம், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு உதவும் திட்டம், தேசிய கால்நடை இயக்கம், கால்நடைகளுக்கான கட்டமைப்பு வசதி வளர்ச்சி நிதியம், கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதேபோல், முட்டை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2014-15ல் 78.48 பில்லியனாக இருந்த முட்டை உற்பத்தி 2021-22ல் 129.53 பில்லியனாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.