மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் உதவியுடன் 18 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி தலைமை வகித்தார். சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட உள்ள வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆர்) அரசுப் பள்ளிகளுக்கு உதவ தொழில்நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்து பலருக்கு தெரியாமல் உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளுக்கு சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் உதவுவதற்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளம், கூடுதல் தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு தமிழக முதல்வரால் விரைவில் தொடங்கிவைக்கப்படும்.
இப்பள்ளியின் பராமரிப்பை தங்கள் கல்வி அறக்கட்டளையிடம் ஒப்படைக்குமாறு ஆற்காடு இளவரசர் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அவரது கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். மாணவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் மட்டும்தான் இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த விழாவில், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராமசாமி, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், எம்.எம்.அப்துல்லா மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் வரவேற்றார். நோபுள் மெட்டல்ஸ் குழும நிர்வாக இயக்குநர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.