சேலம்: மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆழமான பகுதியில் பொது மக்கள் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பொதுப்பணித்துறை எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், குளிக்கச்சென்று சேற்றிலும், ஆழமான பகுதிகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதை தடுக்க தமிழக முதல்வர்வெளியிட்ட வேண்டுகோளில் ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் நீர்நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் குளிக்கச் செல்லும்போது, பெற்றோர் அல்லதுபெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி கொளத்தூரில் மேட்டூர்அணையின் நீர்த்தேக்கப் பகுதியானசேத்துக்குளி என்ற இடத்தில் காவிரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் ஆழமான இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனிடையே, சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்துள்ள சூழல் மற்றும் ஆறுகளில் பாசன வசதிக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளன.

நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி உள்ளன. இத்தருணத்தில் சுற்றுலாமற்றும் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்லுதல் உள்ளிட்ட புதிய இடங்களுக்கு குழந்தைகள் செல்லும்போது அருகில் உள்ள நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளை அறியாமல் நீரில் மூழ்கிவிடும் வகையிலான விபத்துகள் ஏற்பட வாய்பாக அமைகிறது.

எனவே, பெற்றோர் தங்களின் குழந்தைகள் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவதோடு, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஆழமான ஆற்றுப் பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை களையும், தடுப்புகள் வைக்கப் பட்டுள்ளதையும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான சேத்துக்குளியில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுள்ளது. அதில், நீர்த்தேக்கப்பகுதியில் ஆற்றில் இறங்கவும்,குளிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.