தமிழகத்தில் மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் 389 நடமாடும் வாகனங்கள் சேவை திட்டத்தை முதல்வர் அடுத்த வாரம் தொடங்கிவைக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நேரடியாக மருத்துவர்கள் சென்று மருத்துவசேவை அளிப்பதற்காக 389 நடமாடும்மருத்துவ வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவக் களப் பணியாளர் இருப்பார்கள். அத்துடன் தற்காலிக கூடாரம் அமைத்து, மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அடுத்த வாரம் தொடங்கிவைப்பார். ஒவ்வொரு வாகனமும் மாதத்துக்கு 40 முகாம்கள் நடத்த வேண்டும். ரூ.70 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளஇத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும், குறிப்பாக மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் பயன்பெறும்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இன்று வழங்கப்பட்டது. இதுபோல 129 பேருக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மத்திய அரசின் நிதி ரூ.64.50 கோடியும், 39 பேருக்கு தமிழக அரசின் நிதி ரூ.25 லட்சம் வீதம் ரூ.9.50 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 164 பேருக்கு ரூ.74.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வரும் 2-ம் தேதி 27-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 50 லட்சம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1.30 கோடி பேரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
நானும், சுகாதாரத் துறை செயலரும் நாளை டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, ‘பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிஅமைப்பது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, உக்ரைனில் இருந்துவந்த மருத்துவ மாணவர்கள் மருத்துவப் படிப்பை தொடர்வது’ உள்ளிட்ட கோரிக்கைகளை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.