திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள ரெட்டைப் புலி, மூன்றாம் சேத்தி, நான்காம் சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் மின்விளக்கு இன்றி படிக்க முடியாமல் மாணவர்களும், விவசாய நிலங்களில் மின்மோட்டார் மூலம் பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில், ரெட்டைப்புலி என்ற இடத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மன்னார்குடி போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின் விநியோகம் தொடர்பாக மாநில அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறிய போலீஸார், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசினர்.
பின்னர், இந்த மின்வெட்டு பிரச்சினை ஓரிரு நாட்களில் சீரடையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறி பொதுமக்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.