சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கம் மற்றும் சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி உதவியுடன் 400 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் சதுக்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 34 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சதுக்க பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கல்வெட்டின் அருகே மரக்கன்று நட்டு வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி காரின் மூலமாக சென்று சுரங்க நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மற்றும் துறை சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

தினம், தினம் பல லட்சம் மக்கள் இந்த இடத்தை கடந்து செல்வதால் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்க, பல்வேறு கட்டமைப்புகள் உடன் கூடிய சென்னை அடையாளத்தை உலக தரத்தில் உயர்த்த சென்னை சென்ட்ரல் சதுக்கம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 8-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை அடுத்து, பணிகள் முடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது