சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி, இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடத்தின. இந்நிகழ்ச்சியை மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எந்த சூழ்நிலையிலும் தனித்துவத்தை காட்டுவது கல்வி மட்டுமே. பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியம். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் உங்கள் பெற்றோர் கடினமாக உழைக்கிறார்கள்.
உங்களுக்கு ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டும் என்றாலோ, மனதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலோ வெளிப்படையாக பேச வேண்டும். வழிகாட்டுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுஉள்ள புத்தகம், உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை படித்து உங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழு தலைவர் (கல்வி) த.விசுவநாதன், கல்வி அலுவலர் சாந்தி, இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் சந்தியா ஜெயச்சந்திரன், செவ்வந்தி சிங்காரம், அரசி பொன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.