சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டாக்டர் எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு `சர்.ஜெ.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர்’ விருது நேற்று வழங்கப்பட்டது
இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பு சார்பில், தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் 19-வது ஆண்டு சர்.ஜெ.சி.போஸ் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், சைபர் பாதுகாப்பு துறையில் சிறந்த பங்காற்றியமைக்காக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, எலும்பியல் துறை பங்களிப்புக்காக டாக்டர் எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு சர்.ஜெ.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதேபோல, பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்காக பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன், மருத்துவர் நப்பின்னை சேரன், பேராசிரியர் என்.ஜெயக்குமார், துணைப் பேராசிரியர் எஸ்.பி.ஆனந்த், பேராசிரியர்கள் ஜெ.ஜெகநாதன், ஜூடித் விஜயா ஆகியோருக்கு சர்.ஜெ.சி.போஸ் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை சட்டப் பல்கலை. துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையப் பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில், வனத் துறை அதிகாரி பி.சி.அர்ச்சனா கல்யாணி, வி ட்ரீ டெக்னாலஜி சொல்யூஷன் நிறுவன இணை நிறுவனர் பி.செல்வமுத்துகுமார் பேசினர். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பு இயக்குநர் டி.கே.வி.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.