ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து 400 பட்டதாரிகள் பங்கேற்றனர்.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசு உயர் பதவிகளை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இத்தேர்வு, முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியது.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் பணிகளில் 2021-ம் ஆண்டுக்கான 712 காலி இடங்களை நிரப்பும் நோக்கில், முதல்கட்டமான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு அக்.10-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்தகட்டமான மெயின் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 400 பேர் உட்பட நாடு முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர்.

சென்னையில் மட்டும்…

தமிழகத்தில் சென்னை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெயின் தேர்வு ஜன.7, 8, 9, 15, 16-ம் தேதிகளில் நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு தேர்வுக் கூடங்களில் 400 பேர் தேர்வு எழுதினர்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தேர்வர்களும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். தேர்வுக்கூட நுழைவுவாயில்களில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகே, தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டுரைத் தாள் தேர்வு நடந்தது. 2-வது நாளான இன்று காலையும், பிற்பகலும் விருப்பப் பாடங்களுக்கானத் தேர்வுகள் நடக்கின்றன. தொடர்ந்து, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழித் தாள், ஆங்கிலம், விருப்பப் பாடத் தாள் என அடுத்தடுத்த தேர்வுகள் நடக்க உள்ளன.