மதுரை: என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக, விளைநிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருக்கிறது. உடனடியாக இந்த அவசரப் பணியை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தும்; என் மண் என் மக்கள்; பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். அவர் கூறியது:
அவசரம் ஏன்; அவசியம் என்ன? – “என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக, விளை நிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருக்கிறது. உடனடியாக இந்த அவசரப் பணியை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வளவு அவசரத்துக்கு எந்த விதமான அவசியமும் கிடையாது என்பதுதான் எங்களுடைய கருத்து.
அரசியல் செய்ய வேண்டாம்… – மணிப்பூர் விவகாரத்தைப் பொருத்தவரையில் மத்திய பாஜக தலைமையிலான அரசு உண்மை நிலைகளை நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வது என்பது தேவையற்ற ஒன்று. உண்மையான நிலை, பிரச்சினை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கக் கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது நிச்சயமாக ஏற்புடையது அல்ல.
மணிப்பூரை பொறுத்தவரையில் தற்போது அமைதி திரும்பிக் கொண்டு இருக்கிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது அதை 100% முழுமையாக வேண்டும் என அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அங்கே மக்களுடைய சராசரி வாழ்க்கை தொடங்கி இருப்பதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தடையாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்றால், நிச்சயமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் சகஜ நிலை திரும்ப கூடிய நிலையை, இந்திய மக்கள் நாடாளுமன்றத்தின் மூலம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
மிகப் பெரிய தவறு… – காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி தண்ணீரை முறையே கர்நாடகா அரசிடம் பேச வேண்டிய நேரத்தில் பேசி விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்காதது தமிழக அரசுடைய மிகப் பெரிய தவறு என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்பாவி விவசாயிகளை எப்படியாவது ஒரு விதத்தில் நாம் அவர்களை திசை திருப்பலாம் என்று அரசு செய்கின்ற விஷயங்களை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உண்மை நிலையை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.