நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், திருப்பி அனுப்பியதற்கான காரணங்களையும் தமிழக அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.

தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர். எனினும், மசோதா தொடர்பாக எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியாகவில்லை. இன்று ஆளுநர் மாளிகை தரப்பில் நீட் மசோதா தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திரும்ப அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதியே தமிழக அரசிற்கு விளக்கப்பப்பட்டுள்ளது” என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.