வேலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு விபத்துகளில் 238 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு 268 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் விபத்துகளில் உயிரிழப்பை குறைக்க விஐடி போக்குவரத்து மேலாண்மை பிரிவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தெரிவித் துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு காவல் துறை செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 25 கொலைகள் நடைபெற்ற நிலையில், 2022-ம் ஆண்டில் 24 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில், ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ல் 275 குற்ற வழக்குகளில் ரூ.10 கோடியே 77 லட்சத்து 98 ஆயிரத்து 183 மதிப்புள்ள பொருட்கள் களவு போயின. 2022-ல் ரூ.2 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 150 மதிப்புள்ள பொருட்கள் களவுபோன நிலையில், ரூ.1 கோடியே 71 லட்சத்து 27 ஆயிரத்து 352 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. களவு பொருட்கள் பறிமுதல் செய் ததில் 75 சதவீதம் ஆகும். 2021-ல் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கால் களவு பொருட்களின் மதிப்பு அதிகரித்தது.

வேலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. போக்சோ சட்டத்தில் 2021-ல் 49 வழக்குகளும், 2020-ல் 66 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2021-ல் குண்டர் சட்டத்தில் 103 பேர் கைதான நிலையில், 2022-ல் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் மட்டும் 28 பேர் கைதாகியுள்ளனர். காணாமல் போனவர்கள் 2021-ல் 415 பேர், 2022-ல் 466 பேர் ஆகும். 2022-ல் காணாமல் போனவர்களில் 392 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தல் தொடர்பாக 2021-ல் 275 வழக்குகளில் 282 பேர் கைது செய்யப் பட்டு, 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2022-ல் 308 வழக்குகளில் 317 பேர் கைதாகி 536 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. சாராய வழக்குகளில் 2022-ல் மட்டும் 44 ஆயிரத்து 804 லிட்டர் சாராயம், 2.08 லட்சம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட குட்காவை பொறுத்தவரை 2021-ல் 10,932 கிலோ, 2022-ல் 12,789 கிலோவுடன் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 66 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் 2021-ல் 21 கிலோ மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. 2022-ல் ஆபரேஷன் கஞ்சா-1, 2,3 என தொடர் நடவடிக்கையால் 142 வழக்குகளில் 331 கிலோ, 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு 27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளன. 2021-ல் விபத்துகளில் 238 பேர் உயிரிழந்த நிலையில், 2022-ல் 268 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை குறைக்க விஐடி போக்குவரத்து மேலாண்மை துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப் பட்டு, 51 விபத்து ஏற்படும் பகுதிகளில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகரில் போக்கு வரத்து விதி மீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் இ-சலான் நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. மாவட்டத்தில் இ-பீட் நடைமுறை 51-ஆக விரிவு படுத்தப்பட்டுள்ளது. வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை அமல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய அனுமதி பெற்றுள்ளது.

மோட்டார் வாகன வழக்குகள் மூலம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் 2022-ம் ஆண்டில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டுள்ளன’’ என்றார். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், குணசேகரன், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.