புதுக்கோட்டை அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஏப்.22) வாகனங்களைச் சிறைப்பிடித்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
குளத்தூர் வட்டம் வெள்ளனூர் ஊராட்சி, வடசேரிப்பட்டியில் உள்ள அரசு இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.269 கோடி மதிப்பில் 528 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரும் விடப்பட்டது.
இதையடுத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் வடசேரிப்பட்டிக்குக் கொண்டுவரப்பட்டன. இதையறிந்த, அந்தப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் வாகனங்களை நகர்த்த விடாமல் படுத்துக்கொண்டு கோஷம் எழுப்பினர்.
உள்ளூர் மக்களுக்குப் பயன் இல்லாத இந்தத் திட்டத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுக் கொண்டுவந்ததாகக் கூறி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
அப்போது, அரசு நிலத்தில் உள்ளூர் மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அரசுப் பள்ளி, மருத்துவமனை, பிற அரசு அலுவலகங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர, அடுக்குமாடிக் குடியிருப்பை ஒருபோதும் கட்ட அனுமதிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கீரனூர் சுப்பிரமணியன், புதுக்கோட்டை செந்தில்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அரசு திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப் பொதுமக்கள் ஏற்க மறுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஒருகட்டத்தில், ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டுமானப் பணிக்கான பள்ளம் தோண்டுவதற்கு ஆயத்தமாகினர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விரக்தி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்ற மக்கள், பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட இயந்திரங்களை மறித்தும், பள்ளத்துக்குள் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.