மே 24 ஆம் தேதியுடன் 2 வார ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில்,அதிகரித்து வரும் கரோனா தொற்று, இரண்டாம் அலை பரவலின் உச்சம், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறையாததாலும், ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனையை தொடங்கினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் திடீரென உயரத்தொடங்கியது. தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரித்ததை அடுத்து படிப்படியாக உயர்ந்த தொற்று எண்ணிக்கை நாள் தோறும் 35000 க்குமேல் பதிவாகிறது. உயிரிழப்பு தினமும் 300 க்கு மேல் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவலை குறைக்க கட்டுபாடுகள் அமல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் பொதுமக்கள் அலட்சியமாக வெளியில் நடமாடியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து மே.10 அன்று முதல் 2 வார முழு ஊரடங்கை சில தளர்வுகளுடன் அரசு அமல்படுத்தியது. பின்னர் மே.14 அன்று ஊரடங்கில் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 35000 என்கிற எண்ணிக்கையை கடந்தே உள்ளது.
மே.24 ஆம் தேதியுடன் இருவார ஊரடங்கு முடிகிறது. இதையடுத்து நேற்று தொற்றுப்பரவல் அதிகம் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10-30 மணி அளவில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவைப்பட்டால் ஆலோசனையில் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆலோசனை கூட்ட முடிவுகளை வைத்து தமிழக அரசு அடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படம் எனவும் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என அரசுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.