பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் நாளான இன்று கிறிஸ்துமஸ் தினத்தை ( இயேசு பிறந்த தினம்) கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உலக மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

“நாம் இன்னமும் எத்தனை போர்களைப் பார்க்கப் போகிறோம். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் துயர நிலையில் இருக்கிறார்கள். போராலும், வறுமையாலும், அநீதியாலும் இறந்த குழந்தைகளை இந்த தருணத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். உலகில் ஆண்களும் பெண்களும் அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் அலைகிறார்கள். இதற்காக, அண்டைவீட்டார், பெண்கள், சகோதர, சகோதரிகள் என அனைவரையும் துன்பப்படுத்துகிறார்கள்.” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

முன்னதாக, “உக்ரைன் போர் மிகவும் தீவிரமானதாகவும், பேரழிவு தரக்கூடியதாகவும், பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. கடவுளின் பெயராலும், ஒவ்வொரு இதயத்திலும் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்தின் பெயராலும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். வன்முறையையும் மரணத்தையும் நிறுத்துமாறு ரஷ்ய அதிபரை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று போப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.