ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் குடிநீர் தேடி வந்த 45 வயதுடைய பெண் யானை 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததில் இன்று காலை உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் மலைப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர் வரத்து இன்றி வறண்டு உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்காக அடிவார பகுதிகளில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 1-வது பீட் பகுதியில் அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே வனவிலங்குகளுக்காக தண்ணீர் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை இப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த சுமார் 45 வயது உடைய பெண் யானை மண் அரிப்பால் ஏற்பட்ட 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து கிடந்தது. இது குறித்து மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.