தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001-2002 ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3 வது பருவத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத செப்டம்பர் 24 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் .
தேர்வர்கள் https://coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.