ரூ.5 லட்சத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 499 பேரின் பட்டியலை இணையதளத்தில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 700 ரூபாய் என 1,400 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்குப் பின், சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டாதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.

ஆனாலும் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறு சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்ததாாத 38 பேரின் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 140 பேர் குறித்த பட்டியலையும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 321 பேரின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் உள்ளோருக்கு, அவ்வப்போது நினைவூட்டல் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அவற்றை பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கண்டு கொள்வது இல்லை.

எனவே, பொதுமக்கள் அறியும் வகையில் சொத்து வரி செலுத்தாத தனிநபர் மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல், 24.17 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்திருந்த 38 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.5 லட்சத்திற்கு மேல் நிலுவை உள்ள 499 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் ரூ.66.37 கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர். சொத்து வரி செலுத்தாமல் காலதாமதம் செய்தால், அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.