ஒரு நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேற்கொண்ட குற்ற நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘‘தெரிந்தே, வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டு இருந்தாலொழிய அவர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்வது கூடாது; அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

குற்ற நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வருமான வரிச் சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 276C, ‘‘தெரிந்தே ஒரு நபர் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால்’’ என்றுதான் தொடங்குகிறது. ‘தெரிந்தே’ அல்லது வரி ஏய்ப்புக்கான உள்நோக்கத்துடன் ஒருவர் தவறு இழைத்தார் என்பதற்கான முகாந்திரம் இல்லாது, எப்படி குற்ற நடவடிக்கை பாய்ந்தது?

வருமான வரிச் சட்டம் பாகம் 22, ‘தவறுகள் மற்றும் குற்ற நடவடிக்கை’ பற்றி பேசுகிறது. இதில் உள்ள பெரும்பாலான பிரிவுகள் – ‘நிபந்தனைப் பிரிவுகள்’தான். அதாவது ஒரு தவறு ‘நடந்திருந்தால்’ அதன் மீது மேற்கொள்ள வேண்டிய மேல் நடவடிக்கையாகதான் இவை அமைந்துள்ளன.

ஆய்வின் போது கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க தவறினால் (பி.275B) வரிப் பிடித்தம் செய்த தொகையை அரசுக்கு செலுத்த தவறினால் (பி.276B) வேண்டுமென்றே ஒருவர் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய தவறினால் (பி.276CC) தேவையான கணக்குகள் / ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறினால் (பி.276D) தவறான வாக்குமூலம் தந்திருந்தால் (பி.277) வரி ஏய்ப்புக்காக கணக்கு புத்தகத்தை தவறாக எழுதி இருந்தால் (பி.277A) இவ்வாறாக, ஒரு தவறு நடந்திருந்தால் (மட்டுமே), அதாவது தவறு நிகழ்ந்ததாய் உறுதியான பிறகே, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடைமுறை எப்படி இருக்கிறது? முதலில் குற்ற நடவடிக்கை தொடங்கப்படும்; பிறகு பாதிக்கப்பட்ட நபர், தகுந்த ஆதாரங்கள், வலுவான வாதங்கள் அடிப்படையில், தான் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளிவர வேண்டும். அப்போதும், அதுவரை அவர் மீது படிந்த குற்றகறை முழுதும் நீங்கிவிடுமா?

இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது. ஆனாலும் பல துறைகளில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு நபர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பாக அவருக்கு முறையாக எத்தனை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? அத்தனைக்குப் பிறகும் குற்றம் சாட்டுவதற்கான முகாந்திரம் வலுவாக இருப்பதாக உறுதி செய்து கொள்ளப்படுகிறதா?

சில மாதங்களுக்கு முன்பு, மிகப் பிரபலமான நடிகர் மீது அபராதம் விதித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. ஒரு நண்பருக்கு, தான் அளித்த கடன் மீது கிடைத்த சொற்ப வட்டியை வேறொரு தலைப்பின் கீழ் அவர் காட்டி இருந்தார். இந்த வழக்கில் அபராதம் விதிப்பதற்கான முகாந்திரம் அநேகமாக அறவே இல்லை. ஆனாலும் அபராத நடவடிக்கை தொடுக்கப்பட்டது. ஏன் இப்படி நடக்கிறது?

சட்டப் பிரிவுகளிலேயே குழப்பங்கள் நீடிக்கின்றன. தெளிவில்லா வாசக அமைப்புகள் சிக்கலை வளர்க்கின்றன. இத்துடன் சட்டத்தை நிறைவேற்றுகிற பொறுப்பில் உள்ள அலுவலர்களும் சட்ட வாசகங்களை தாண்டி அது வலியுறுத்தும் உணர்வு / செய்தியில் கவனத்தை செலுத்துவது இல்லை. நிதித்துறை சார்ந்த பல வழக்குகளும் இதனாலேயே நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக அரசுக்கு வர வேண்டியதாக காட்டப்படும் வருவாயில் பெருமளவு வராமலே போகின்றன. இதனை மனதில் கொண்டுதான், வரி விதிப்பில் மிகுந்த அறிவார்ந்த பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு அவ்வப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களை அரசு கேட்டுக் கொள்கிறது.

இந்தியாவில் அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாயில் (நேரடி வரி, மறைமுக வரி ஆகிய இரண்டிலும்) மிகப் பெரும்பான்மை தொகை, வரி செலுத்துவோர் தாமாக முன் வந்து செலுத்துகிற வரி மூலமே கிட்டுகிறது. சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு, ‘சோதனை’, ‘மேல் நடவடிக்கை’ வழியே வருகிற வருவாய் மிக குறைவு. மாநில அரசுகளுக்கான வருவாயும் இப்படியே – விதிமுறைகளின்படி, தாமாக அரசுக்கு வரி / கட்டணம் செலுத்துவோரின் பங்களிப்பினால்தான் அரசு கருவூலம் நிறைகிறது.

ஒவ்வொரு துறையின் அமலாக்கப் பிரிவுகள் மூலம் வழக்குகள் பெருகும் அளவுக்கு அரசுக்கு ஆதாயம் பெருகுவதில்லை; தவறுகள், குற்றங்களும் குறைவதில்லை. இந்த நிலையில், மத்திய அரசு, மாநில அரசு என்ற வேறுபாடு இன்றி, எல்லா துறைகளிலும், நிர்வாக ‘அச்சுறுத்தல்’ தொடர்கிறது.

காவல் துறையின் வழக்கு பதிவுகளும் இதே ரகம்தான். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களை இயன்ற வரை அதிக பிரிவுகளின் கீழ் பதிவு செய்தல், ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்பான நடைமுறையாகிவிட்டது. சாதாரண தவறு முதல் மிக கொடூரமான குற்றம் வரை சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் ஆண்டுகணக்கில் போராடும் குடிமக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

சட்டங்கள், சாமானியருக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்று அவையே, அரசு நிர்வாகத்தின் அச்சுறுத்தல் ஆயுதமாய் மாறிவிட்டன. தவறு செய்வோரை தண்டிப்பதில் தவறே இல்லை. காலம் தாழ்த்தாமல் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுப்பதை முழு மனதுடன் வரவேற்கலாம். ஆனால், கண்மூடித்தனமாக அபராதம், தண்டனை, வழக்கு என்று ‘தாக்குவதால்’ ஏற்படுகிற பாதிப்புக்கு யார் பொறுப்பு?

இன்று, அரசு துறைகளின் தாக்கீதுகள் எத்தனை ஆயிரம் பேரின் வாழ்வை முடக்கி போட்டுள்ளன? எத்தனை ஆயிரம் பேரை தீராத மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன? இவற்றுக்கெல்லாம் முடிவுதான் எப்போது?

கணினி மயமாக்கப்பட்ட, ‘முகமற்ற’ அரசு செயல்பாடுகள், மக்களுக்கு விரைந்த சேவை வழங்குகின்றன. மறுப்பதற்கில்லை. அதே சமயம் அதுவே மனிதாபிமான கோணத்தை முற்றிலுமாக அழித்து விட்டு, இதயம் அற்ற இயந்திரத்தனமான அணுகுமுறையை மட்டுமே முன்வைக்கிறது. வரப்போகும் நாட்களில், இந்த வழிமுறை மேலும் மேலும் பரவவே செய்யும். அப்போது அரசு துறைகளின் ‘சட்ட நடவடிக்கைகள்’ இன்னமும் ‘ஆழமாக’ போகும் ஆபத்து இருக்கிறது. நிச்சயமாக, ஒரு சாதாரண மனிதனுக்கு இது நல்ல செய்தி அல்ல.

அரசு துறைகளின் செயல்பாடு மக்களுக்கு பயன் தருகிறதா? பயம் தருகிறதா?

இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது மக்களுக்கான அரசின் எதிர்காலம். மக்களின் எதிர்காலமும்.